தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது
சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் 5-வது வார்டுக்கு உட்பட்ட உயிரியல் பூங்கா செல்லும் சாலையில் என்.ஜி.ஜி.ஓ. காலனி எதிர்புறம் அமைந்துள்ள சந்தோஷ்நகர் மற்றும் ரம்யா கார்டன் குடியிருப்பு பகுதிகளுக்கு பெயர் பலகைகள் இல்லை. இதனால் தபால்காரர், பொதுமக்கள் முகவரி தெரியாமல் சிரமங்களை சந்தித்து வந்தனர். இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு புதிய பெயர் பலகை வைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு உதவியாக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வே.அழகரசன், சந்தோஷ்நகர், சேலம்.
‘தினத்தந்தி’க்கு பாராட்டு
சேலம் 5 ரோட்டில் இருந்து சேலம் ஜங்ஷன் செல்லும் பகுதியில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது என்று நேற்று முன்தினம் ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்தனர். அந்த பகுதி முழுவதும் தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு உதவியாக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-மா.குமரன், ஆண்டிப்பட்டி, சேலம்.
குரங்குகள் தொல்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக கீழ் வீதி பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் கடைகளுக்குள் புகுந்து தின்பண்டங்கள், பழங்களை எடுத்து சென்று அட்டகாசம் செய்கின்றன. மேலும் வீட்டுத் தோட்டங்களில் காய்கறி, மலர்களை பறித்து சேதப்படுத்தி வருகின்றன. இந்த குரங்குகள் தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரகாஷ், மத்தூர்.
போலீசார் ரோந்து செல்ல வேண்டும்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை காலை, மாலை இரு வேளைகளிலும் இருசக்கர வாகனத்தில் சில மர்மநபர்கள் அங்கும் இங்கும் வாகனத்தை இயக்குவதோடு பள்ளி மாணவிகளை கிண்டல் செய்வது, சைகை காட்டுவது போன்ற நாகரிகமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அங்கும் இங்கும் இருசக்கர வாகனத்தை இயக்குவதால் பள்ளி மாணவிகள் மட்டுமின்றி அலுவலகம் செல்பவர்களும் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே பள்ளி நேரங்களில் மாணவிகளின் நலன் கருதி போலீசார் தனிகவனம் செலுத்தி அந்த பகுதியில் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாரதிதாசன், பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.
குண்டும், குழியுமான சாலை
சேலத்தை அடுத்த சின்னப்பம்பட்டியில் இருந்து தாரமங்கலம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுவதுடன் விபத்துகளிலும் சிக்கி காயம் அடைகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி குண்டும், குழியுமான சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்தி, வணிச்சம்பட்டி, சேலம்.
போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் சென்னை பஸ்கள் கொண்டலாம்பட்டி ரவுண்டானா மற்றும் சீலநாயக்கன்பட்டி பாலம் வழியாக எருமாபாளையம், சன்னியாசிகுண்டு மார்க்கமாக சென்றால் போக்குவரத்து நெரிசல் பெரும்பாலும் குறைய வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், சேலம்.
பஸ்கள் இயக்கப்படுமா?
கிருஷ்ணகிரியில் இருந்து வாடமங்கலம் எண்-31 மற்றும் 50 ஆகிய நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை வாடமங்கலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இருமத்தூர் (தர்மபுரி மாவட்டம்) வரை இயக்கினால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருமத்தூர் மற்றும் இதர கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்ப நலனுக்காக இந்த வழித்தடத்தை (கிருஷ்ணகிரி-வாடமங்கலம்-இருமத்தூர்) அதிகாரிகள் பரிசீலனை செய்து பஸ் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்.
-ஊர்பொதுமக்கள், இருமத்தூர்.
வாகனங்களால் இடையூறு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் பள்ளி முன்பு உள்ள குறுகிய சாலையின் நடுவே கார் மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், தர்மபுரி.