செஷல்ஸ் தீவில் மேலும் 25 மீனவர்கள் சிறைபிடிப்பு
செஷல்ஸ் தீவில் குமரியை சேர்ந்தவர்கள் உள்பட மேலும் 25 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொல்லங்கோடு:-
செஷல்ஸ் தீவில் குமரியை சேர்ந்தவர்கள் உள்பட மேலும் 25 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குமரி மீனவர்கள்
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 22-ந் தேதி குமரி மாவட்டத்தை சேர்ந்த குக்ளின், சுனில், ஜெனீஷ் ஆகியோரின் 3 விசை படகுகளில் 33 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் 21 குமரி மீனவர்கள் அடங்குவர்.
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி செஷல்ஸ் தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 33 பேரையும் அங்குள்ள கடற்படையினர் சிறைபிடித்தனர். இதேபோல் அந்தமான் தீவில் இருந்து மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குமரியை சேர்ந்த 5 மீனவர்கள் உள்பட 8 பேர் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குமரி மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குமரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் சில மீனவர்கள் செஷல்ஸ் தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
மேலும் 25 பேர் சிறைபிடிப்பு
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து குமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த சூசைநாயகம், பூத்துறையை சேர்ந்த அந்தோணி ஆகியோரின் 2 விசைப்படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நேற்றுமுன்தினம் காலையில் 25 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி செஷல்ஸ் தீவு கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இதில் படகுகளுக்கு சொந்தமான 2 பேரை மட்டும் கடற்படையினர் கைது செய்தனர். மற்ற 23 பேரையும் விசைப்படகுகளிலேயே சிறை வைத்துள்ளனர். அதே சமயத்தில் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கைப்பற்றினர்.
அதன்படி இதுவரை குமரியை சேர்ந்தவர்களின் 5 விசைப்படகுகளில் சென்ற 58 மீனவர்கள் செஷல்ஸ் தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். எனவே செஷல்ஸ் தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.