குடிநீர் இணைப்பு வழங்குவதில் தகராறு:மறியலில் ஈடுபட்ட 77 பேர் கைது
பேரையூர் அருகே குடிநீர் இணைப்பு வழங்குவது தொடர்பான பிரச்சினையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரையூர்,
பேரையூர் அருகே உள்ள சாலிசந்தையை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி சீதாலட்சுமி. இவர் அருகில் உள்ள பி.அம்மாபட்டி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டியுள்ளார். தனது வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி கல்லுப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தார். இதையறிந்த பி.அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சீதாலட்சுமி வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க கூடாது, இதனால் தங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்று பேரையூர் தாசில்தார், மதுரை மாவட்ட கலெக்டர், ஆகியோரிடம் மனு கொடுத்தனர். இந்தநிலையில் சீதாலட்சுமி வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க டி.கல்லுப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆஷிக், பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி, பேரையூர் துணை தாசில்தார் கருப்பையா, மற்றும் போலீசார் சென்றனர். உடனே பி.அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பு வழங்க கூடாது என்று சாலிசந்தை -பி.அம்மாபட்டி சாலையில் மறியல் செய்தனர். அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆஷிக் பேரையூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மறியல் செய்த 48 பெண்கள் உள்பட 77 பேரை போலீசார் கைது செய்தனர்.