இலவச பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் இலவச பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-10 20:21 GMT
ராஜபாளையம். 
ராஜபாளையத்தில் இலவச பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
வீட்டு மனை பட்டா 
 ராஜபாளையம் நகர் மற்றும் தொட்டியபட்டி, மேலப்பாட்டம், கரிசல் குளம், மதுரை வீரன் காலனி, இனாம் செட்டி குளம், சேத்தூர், தேவதானம், முகவூர், மலையடிப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கலிங்கல் மற்றும் சமுசிகாபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக் கணக்கான அருந்ததியர் இனத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் 600-க்கும் மேற்பட்டோருக்கு குடியிருக்க வீடு இல்லாததால், தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கடந்த 3 ஆண்டுகளாக வருவாய் துறையினரிடம் மனு அளித்து வருகின்றனர். ஆனால் இது வரை தாங்கள் அளித்த மனுவுக்கு அரசு அதிகாரிகள் விசாரணை கூட நடத்தவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
ஆர்ப்பாட்டம் 
இந்தநிலையில் ஆதி தமிழர் கட்சி சார்பில் அருந்ததியர் இனத்தை சேர்ந்த மக்கள், முடங்கியாறு சாலையில் இருந்து கோரிக்கைகளை முழக்கமிட்டவாறு ஊர்வலமாக சென்றனர்.
 பின்னர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பின்னர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் குறிப்பிட்ட சிலர் மட்டும் அலுவலகத்திற்குள் சென்று, வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் ராமச்சந்திரன், இன்னும் 3 மாத காலத்திற்குள் தகுதியான அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

மேலும் செய்திகள்