கோவிலில் உண்டியல் பணம் திருட்டு

கோவிலில் உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2022-03-10 20:20 GMT
பெரம்பலூர்:

உண்டியல் பணம் திருட்டு
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூசாரி ரெங்கராஜ் வழக்கம்போல் பூஜைகளை முடித்துக்கொண்டு, கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்து பணம் திருட்டு போயிருந்தது. சில்லரை காசுகள் அப்படியே இருந்தன. ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழாவின்போது அந்த கோவில் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். இதனால் அந்த உண்டியலில் தற்போது சுமார் ரூ.50 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கோவில் பூசாரி தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் அதே பகுதியில் கடந்த வாரம் தீமிதி திருவிழா நடந்து முடிந்த காளியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருட முயன்றுள்ளனர். ஆனால் உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்