பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

Update: 2022-03-10 20:18 GMT
அரியலூர்:

மயங்கி விழுந்தார்
அரியலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் லட்சுமி பிரியா (வயது 32). இவரது கணவர் சக்திமுருகன். இவர் அரியலூர் ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அரியலூரில் உள்ள மின் நகரில் அவர்கள் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரியா புறவழிச்சாலையில் செந்துறை ரோடு ரவுண்டானாவில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
வாக்குமூலம்
இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரிடம், திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரியா, திருச்சியில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், அரியலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
காரணம் என்ன?
இதனால் பணிச்சுமை, பணிகளில் உயர் அதிகாரிகள் தொந்தரவு அல்லது பாலியல் தொந்தரவு அல்லது குடும்பத்தில் பிரச்சினை போன்ற காரணத்தால், அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அரியலூர் ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வரும் பிரியங்கா(28), நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும், அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்