கரும்பு சாகுபடிக்காக விவசாயி வடிவமைத்த எந்திரம் குறித்த செயல்விளக்கம்
கரும்பு சாகுபடிக்காக விவசாயி வடிவமைத்த எந்திரம் குறித்த செயல்விளக்கம் நடந்தது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம் மல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். கரும்பு விவசாயி. கரும்பு விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை, கட்டுப்படியாகாத விலை என்ற நிலை உள்ளதால் கரும்பின் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்தோடு கட்டை கரும்பு பராமரித்தல் என்ற எந்திரத்தை வடிவமைத்துள்ளார். இந்த எந்திரத்தின் செயல்விளக்கம் அஸ்தினாபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி முன்னிலையில், கிரீடு வேளாண் அறிவியல் மைய தலைவர் அழகுகண்ணன், வேளாண் தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா மற்றும் வேளாண்மை துறை சார்ந்த அரசு அலுவலர்கள், முன்னோடி கரும்பு விவசாயிகள் முன்னிலையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
நீடித்த மறுதாம்பு கரும்பு சாகுபடி செய்ய வடிவமைக்கப்பட்ட இந்த எந்திரத்தின் பயன்கள் குறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பை ஒரு முறை நடவு செய்தால் போதும் 7 முதல் 8 ஆண்டுகள் வரை மருதாம்பு பயிரை சாகுபடி செய்ய முடியும். இதில் நல்ல வருவாய் உள்ளது. ஒரு முறை நிலத்தை உழுது பயிரிட்டு அறுவடை செய்வது வரை ரூ.70 ஆயிரம் செலவான நிலையில், தற்போது இந்த எந்திரம் மூலம் ரூ.4 ஆயிரம் மட்டுமே செலவு ஆகும். மேலும் அதிக இடைவெளி உள்ளதால் விளைச்சல் அதிகரிக்கும். செலவு குறைந்து லாபம் கிடைக்கும், என்றனர்.