சித்திரை திருவிழா பணிகளை மேயர் இந்திராணி ஆய்வு

சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகளை மேயர் இந்திராணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் மாநகராட்சி சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Update: 2022-03-10 20:17 GMT
மதுரை, 

சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகளை மேயர் இந்திராணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் மாநகராட்சி சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

வைகை ஆற்றில்...

மதுரை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணத்தால் சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 16-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக மாநகராட்சி ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதியில் மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது அங்கு மதுரை மாநகராட்சி சார்பில் நிரந்தர சறுக்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலை வசதி, குடிநீர் வசதி, நடமாடும் கழிப்பிட வசதி, சுகாதாரம், மின்விளக்குகள் வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்படும்.

உயர்மட்ட மேம்பாலம்

இந்த பணிகள் குறித்து மாநகராட்சி புதிய மேயராக பொறுப்பேற்றுள்ள இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று அங்கு ஆய்வு செய்தனர். அப்போது மேயர் இந்திராணி, சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி சார்பாக சிறப்பாக செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அவர்கள் ஒபுளாபடித்துறை வைகை ஆற்றின் குறுக்கே ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் பணிகளை பார்வையிட்டனர். இந்த உயர்மட்ட மேம்பாலத்தின் நீளம் 223 மீட்டர், அகலம் 13 மீட்டர், நடைமேடை இருபுறமும் தலா 2.25 மீட்டர் ஆகும்.
அதனை தொடர்ந்து மேயர் இந்திராணி, மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் அருகில் ரூ.45 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பூங்கா மற்றும் போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக கட்டப்பட்டு வரும் படிப்பகம் ஆகிய பணிகளை ஆய்வு செய்தார். அப்போது மேயர் இந்த பணிகளை விரைந்து முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது நகர் பொறியாளர் அரசு, உதவி கமிஷனர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி பொறியாளர்கள் தியாகராஜன், சந்தானம், சுகாதார அலுவலர்கள் வீரன், ராஜ்கண்ணன், கவுன்சிலர் லோகமணி உள்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்