நடிகர் சூர்யா உருவபொம்மை எரிப்பு
திருப்பனந்தாள் அருகே வன்னியர் சங்கத்தினர், நடிகர் சூர்யா உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பனந்தாள்:
திருப்பனந்தாள் அருகே வன்னியர் சங்கத்தினர், நடிகர் சூர்யா உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
நடிகர் சூர்யா நடிப்பில் நேற்று வெளியாகி உள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரையிடுவதற்கு வன்னியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கும்பகோணத்தில் உள்ள 2 திரையரங்குகளில் நேற்று இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது. இதையடுத்து திரையங்குகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
உருவ பொம்மை எரிப்பு
இந்த நிலையில் திருப்பனந்தாள் அருகே அம்மையப்பன் கிராமத்தில் வன்னியர் சங்கத்தை சேர்ந்த மணி தலைமையில் 10-க்கும் மேற்பட்டவர்கள், ‘ஜெய்பீம்’ படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்தியதாக கூறியும் இதற்காக நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து அவரது உருவ பொம்மையை எரித்தனர்.
தகவலறிந்ததும் திருப்பனந்தாள் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உருவபொம்மையை கைப்பற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.