ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.5 லட்சம் திருட்டு

மதுக்கூரில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.5 லட்சத்தை ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-03-10 20:01 GMT
மதுக்கூர்:
மதுக்கூரில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.5 லட்சத்தை ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால்(வயது62). இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஆவார். இவரது மகன் நரேஷ்குமார். டாக்டரான இவர், மதுக்கூர் பஸ் நிலையம் அருகில் சொந்தமாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை 11. 30 மணியளவில் மதுக்கூர் மெயின் ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ரூ.5 லட்சத்தை தனது குடும்ப தேவைக்காக வேணுகோபால் எடுத்துள்ளார். அதனை தனது ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் வைத்துள்ளார்.
ரூ.5 லட்சம் திருட்டு
பின்னர் டீ குடிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நான்கு பேர் ஹெல்மெட் அணிந்தபடி அங்கு வந்துள்ளனர். அவர்கள், வேணுகோபாலின் ஸ்கூட்டரில் இருந்த பணத்தை திருடினர். 
இதுகுறித்து மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் வேணுகோபால் புகார் செய்தார். புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது சந்தேகத்துக்குரிய வகையில் 4 பேர் ஹெல்மெட்வுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது. 
ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியின் பணத்தை திருடிச்சென்றவர்கள், ஹெல்மெட் அணிந்து இருந்ததால் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காகவே அவர்கள் திட்டமிட்டு ஹெல்மெட் அணிந்து வந்து இருந்தார்களா? என்று விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்