ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ரசாயன கழிவுநீர் விளைநிலங்களில் பரவியதால் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்:
ரசாயன கழிவுநீர் விளைநிலங்களில் பரவியதால் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சா எண்ணெய்
விவசாய தொழிலை உயிர் மூச்சாக கொண்டு உள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்தின் மூலம் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதோடு விவசாயத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
அந்த வகையில் இந்த மாவட்டத்தில் பாரதிமூலங்குடி, வெள்ளக்குடி, அடியக்கமங்கலம், கருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் கச்சா எண்ணெய் பரவி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலபனையூர் ஊராட்சி கமலாபுரம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் கச்சா எண்ணெய் எடுத்துவரும் பகுதியில் ரசாயன கழிவுகளை சேமித்து வைத்துள்ளனர். சில தினங்களில் பெய்த மழையின் காரணமாக ரசாயன கழிவுகள் சேமித்து வைத்துள்ள குட்டை போன்ற பகுதி நிரம்பி அக்கழிவுகள் அருகில் இருந்த விவசாய கூலி தொழிலாளியான சுமித்ரா சேகர் என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விளைநிலத்தில் பரவியது.
ஆர்ப்பாட்டம்
இதனால் நிலத்தின் மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு கண்களில் பலவித நோய்கள் தாக்கும் அபாயமும் எழுந்துள்ளதாக கிராம மக்கள் விவசாயிகள் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்தின் இத்தகைய மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வாழும் பொதுமக்களின் நலன்காக்க வலியுறுத்தியும் ஓ.என்.ஜி.சி. கச்சா எண்ணெய் எடுக்கும் பகுதியினை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர்.
இதையோட்டி நேற்று ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அருகே கமலாபுரம் பொதுநல கமிட்டி தலைவர் ஆர்.சரவணன், தி.மு.க. ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் கிளைக்கழக செயலாளர் ஊமத்துரை இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் கிராம கமிட்டி தலைவர் செல்லையன், செயலாளர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பிரச்சினைக்கு தீர்வு
கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் எடையூர் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், கோட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை (சனிக்கிழமை) அன்று மன்னார்குடி தாசில்தார் தலைமையில் ஓ.என்.ஜி.சி. உயர் அதிகாரிகளை கொண்ட குழு மற்றும் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு, கமலாபுரம் கிராம மக்கள், கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆகியோரை கொண்டு கூட்டம் நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்று கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.