வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
கரூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கரூர்,
நகை, பணம் திருட்டு
கரூர் அருகே உள்ள ராமனூர் நேரு நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 57). இவர் சமையல் ஒப்பந்ததாரராக உள்ளார். நேற்று முன்தினம் செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.