தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-10 18:27 GMT
கரூர்
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நக்கசேலம் கிராமம்  அம்பேத்கர் நகரில்  முறையான கழிவுநீர் வாய்க்கால் இல்லாமல் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராமச்சந்திரன், நக்கசேலம், பெரம்பலூர். 

தெரு நாய்களால் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அளவுக்கு அதிகமாக தெரு நாய்கள் சுற்றி வருகின்றன.  குறிப்பாக இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அதே வேளையில் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.  ஆகவே உரிய அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு தெரு நாய்களை பிடித்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கீரமங்கலம், புதுக்கோட்டை. 

குண்டும், குழியுமான சாலை 
புதுக்கோட்டை மாவட்டம்,  ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட திருப்பெருந்துறை ஊராட்சியில் உள்ள குளத்து குடியிருப்பு பகுதியில் ஆவுடையார் கோவிலில் இருந்து  காரைக்குடியை இணைக்கும் இணைப்புச் சாலை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு  ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.  இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை. 
இதேபோல் கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே கரூர்-ஈரோடு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புன்னம் பகுதிக்கு செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புன்னம்சத்திரம், கரூர். 

மூடி இல்லாத தொட்டி 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, அன்னவாசல் பேரூராட்சியில் புதுக்கோட்டை-மணப்பாறை சாலை ஓரத்தில்  காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் வால்வுக்கான தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி மூடப்படாமல் உள்ளதால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி இந்த பள்ளத்தில் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அன்னவாசல், புதுக்கோட்டை. 


மேலும் செய்திகள்