100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது செல்லப்பம்பட்டி ஊராட்சி. இதை சுற்றியுள்ள நடுப்பட்டி, மேற்குபட்டி, பாலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதமாக செல்லம்பட்டி ஊராட்சி பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தலையில் மண்சட்டியை சுமந்து வந்து முற்றுகையிட்டனர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின்போது வேலை வாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நேற்று சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.