லாரி மீது கார் மோதல்; போலீஸ் ஏட்டு உள்பட 5 பேர் காயம்
செம்மடை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
கரூர்,
போலீஸ் ஏட்டு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சந்திரன் (வயது 48). இவர் தனது மனைவி ரோகிணி மாலா (40) மற்றும் தனது உறவினரான பிரகாஷ் (42), அவருடைய மகன் சிவா (18) ஆகியோருடன் கரூர் வழியாக சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். சேலம் மாவட்டம் எடப்பாடி சமத்துவபுரத்தை சேர்ந்த மாதேஸ்வரன் (50) என்பவர் காரை ஓட்டி சென்றுள்ளார்.
5 பேர் காயம்
இந்தநிலையில் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்மடை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே சாலையை கடக்க ஒருவர் முயன்றுள்ளார். இதையடுத்து அவர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் மாதேஸ்வரன் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 5 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.