புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன
புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆதனக்கோட்டை:
மகளிர் தின விழா
புதுக்கோட்டை வேர்ல்ட் விஷன் இந்தியா வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஆதனக்கோட்டையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பெருங்களூர் ஊராட்சி மன்ற தலைவி சரண்யா ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். வேர்ல்ட் விஷன் இந்தியா திட்ட மேலாளர் கிளாடிஸ் அறிமுக உரையாற்றினார். ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் குணசீலி கலந்துகொண்டு பெண்களின் ஆரோக்கியம் குறித்து பேசினார். வக்கீல் பர்வின் பானு கலந்துகொண்டு சட்டத்தில் பெண்களின் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் சலோமி நன்றி கூறினார்.
கீரனூர்
கீரனூர் போலீஸ் நிலையத்தில் மகளிர் காவல் நிலையம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா கலந்து கொண்டு கேக் வெட்டினார். இதில் மண்டையூர், மாத்தூர், உடையாப்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசார் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்ரமணியம் கலந்து கொண்டு பேசுகையில், ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறையிலும் சாதித்து வருவது இன்றைய நிகழ்ச்சி எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும், பெண்கள் அச்சமின்றி அனைத்து துறையிலும் சாதிக்க காவல்துறை சார்பில் அனைத்து வழிகாட்டுதலும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகள் சிலம்பம், வாள் வீசி காண்பித்தனர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆவூர்
விராலிமலை ஒன்றியம், மருதம்பட்டியில் கொடிகாத்த குமரன் உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மருதம்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கி பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிதி செயலாளர் அனிதா குமாரசாமி வரவேற்று பேசினார். விழாவில் இலுப்பூர் மதர்தெரசா வேளாண்மை கல்லூரி மாணவிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்களுக்கு கோலப்போட்டி, கூடைப்பந்து போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கொடிகாத்த குமரன் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சர்தார்குமாரசாமி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உழவர் உற்பத்தியாளர் குழு முதன்மை செயல் அலுவலர் தவமணி நன்றி கூறினார்.
வடகாடு
மகளிர் தினத்தை முன்னிட்டு குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் வடகாடு கிராமத்தில் உள்ள தென்னந்தோட்டத்தில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் பொருட்டு தென்னை மரங்களில் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய பூச்சிகளான காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூண் வண்டு ஆகியவற்றின் சேதத்தை தடுக்கும் வகையில் ஆமணக்கு புண்ணாக்கு கரைசலை எவ்வாறு செய்வது என செய்து காட்டினர். மேலும் இந்த இயற்கை கரைசலை அந்த தோட்டத்தின் விவசாயியையே வைத்தும் செய்ய வைத்து அதன் மூலமாக தென்னை மரத்தில் ஏற்படக்கூடிய சேதத்தை தடுத்து பயனடைய வைக்கும் முயற்சியையும் முன்னெடுக்க வைத்தனர்.
சான்றிதழ்
புதுக்கோட்டை திலகர் திடலில் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவில் ஆர்செட்டி இயக்குனர் ஜே.கலைச்செல்வி வரவேற்றார். பயிற்சி மையத்தில் கிராமப்புற இளம்பெண்கள் 35 பேர் அப்பளம் மற்றும் ஊறுகாய் உள்ளிட்ட உணவுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பினை மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னாள் ஐ.ஓ.பி. ஆர்செட்டி இயக்குனர் ஆர்.சரண்யா தொடங்கி வைத்தார். இத்துடன் சென்ற வாரம் நிறைவடைந்த ஆரி எம்பிராய்டரி பெண்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பி.ஜே.ரேவதி சான்றிதழ் வழங்கினார்.
ஆலங்குடி
ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆலங்குடி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை கவுசல்யா தலைமை தாங்கினார். வட்ட சட்ட பணிகள் குழு உறுப்பினர் செந்தில்ராஜா வரவேற்றார். வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி நல்லகண்ணன் சிறப்புரையாற்றினார். இதில் வக்கீல்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.