கோட்டக்குப்பம் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி திமுக எம்பி மகன் பலி

கோட்டக்குப்பம் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி தி.மு.க. எம்.பி. மகன் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.

Update: 2022-03-10 17:50 GMT
வானூர், 

சென்னையை சேர்ந்த தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. என்.ஆர். இளங்கோ. இவரது மகன் ராகேஷ் (வயது 30). இவர் தனது நண்பர் வேதவிகாஷ் (29) என்பவருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தார். காரை ராகேஷ் ஓட்டியதாக கூறப்படுகிறது.

புதுவையையொட்டி உள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு என்ற இடத்தில் நள்ளிரவு 2.30 மணியளவில் கார் வந்துகொண்டிருந்தது. 

அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி தாறுமாறாக ஓடி கார் கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ராகேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். அவரது நண்பர் வேதவிகாஷ் படுகாயம் அடைந்தார். 

2 மணி நேர போராட்டம்

விபத்து குறித்து தகவல் அறிந்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரின் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.  இதையடுத்து மரக்காணத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், 2 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு ராகேஷின் உடலையும், படுகாயத்துடன் அவரது நண்பர் வேதவிகாசையும் மீட்டனர்.

பிரேத பரிசோதனை

அங்கிருந்து ராகேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியை அடுத்த கனககெட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயமடைந்த வேதவிகாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்