கடலை எண்ணெய் நல்லெண்ணெய் விலை உயரவில்லை

தமிழகத்தில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய்களின் உற்பத்தி அதிக அளவில் உள்ளதால் உக்ரைன் போரால் அவற்றின் விலை உயர வில்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

Update: 2022-03-10 17:41 GMT
தாராபுரம்
தமிழகத்தில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய்களின் உற்பத்தி அதிக அளவில் உள்ளதால் உக்ரைன் போரால் அவற்றின் விலை உயர வில்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
மாநில மாநாடு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரிமா அரங்கத்தில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டார்.
 பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற மே 5-ந்தேதி திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் 39-வது வணிகர்கள் விடியல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த மாநாட்டில் சுமார் 17 லட்சம் வணிகர்கள் கலந்துகொள்கின்றனர். ரஷியா-உக்ரைன் போரால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. மேலும் சமையல் எண்ணெயை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய வேண்டுமென அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் சட்டங்களால் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
எண்ணெய் விலை உயர்வு
எனவே சட்டங்களில் சில தளர்வுகளை அளிக்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்காமல் விற்பனை செய்வதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைப்பதுடன், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் எண்ணெய் விற்பனை செய்ய முடியும். கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுவதால் இதன் விலை உயர வில்ைல. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சன் பிளவர் ஆயில், பாமாயில் போன்ற எண்ணையின் விலையில்தான் லிட்டருக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.
சுங்க வரி ரத்து
நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வணிகப்பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கக்கூடாது. வரி விதித்தால் விலைவாசி உயர காரணமாகிறது. சுங்க வரியை வணிகர்களுக்கு ரத்து செய்தால் விலைவாசி குறைய வாய்ப்புள்ளது. மேலும் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வணிக கடைகளின் வாடகையை ஒரே வரிசையில் முறைப்படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் வணிகப் பொருள் மார்க்கெட் கட்டிடங்களை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். குறிப்பாக தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட், பூக்கடை கார்னர் பகுதியில் உள்ள வாடகை கடைகள் ஆகியவற்றிற்கு தரமான வணிக கட்டிடங்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் அழுத்தம் கொடுக்கப்படும். மேலும் மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை சரியான நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்