சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்

சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு தரப்பு மாணவர்கள் சைக்கிள்களை நடுரோட்டில் போட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-03-10 22:55 IST
மூங்கில்துறைப்பட்டு, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து கடந்த 2 நாட்களாக பள்ளி வளாகத்திற்கு வெளியே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.

மோதல்

நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மீண்டும் இரு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். இதை கண்ட மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓடினர். இதனால் பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மோதலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலை மறியல்

தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் சிவராமனும் வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்களுக்குள் எந்தவித பாகுபாடும் இருக்கக்கூடாது. தொடர்ந்து ஒற்றுமையாக படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று கூறி அறிவுறுத்தினார். 
ஆனால் இதை கண்டுகொள்ளாத ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் திடீரென வெளியே வந்து, சைக்கிள்களை சங்கராபுரம் செல்லும் சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதை பார்த்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வந்ததால் மேலும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைத்து விட்டனர். 

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அரசம்பட்டு, பாலப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்