தக்காளி விலை கடும் வீழ்ச்சி

தக்காளி விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள், செடிகளில் பழுத்திருக்கும் பறிக்காமல் விட்டுள்ளனர். இதனால் செடியிலேயே தக்காளி பழங்கள் அழுகி வீணாகி வருகிறது.

Update: 2022-03-10 17:17 GMT
காங்கேயம்
தக்காளி விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள், செடிகளில் பழுத்திருக்கும் பறிக்காமல் விட்டுள்ளனர். இதனால் செடியிலேயே தக்காளி பழங்கள் அழுகி வீணாகி வருகிறது.
தக்காளி விலை குறைந்தது
காங்கேயம், படியூர், சம்பந்தம்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இடுபொருள் செலவு அதிகமில்லாத பயிர் என்பதாலும், பறிக்க அதிக ஆட்கள் தேவைப்படாத பயிர் என்பதாலும் விவசாயிகள் தக்காளியை விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர்.
 இந்தப் பகுதிகளில் விளைவிக்கப்படும் தக்காளி பெரும்பாலும் திருப்பூர் தினசரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. காங்கேயம் பகுதியில் இருந்து மட்டும் தினசரி 50-க்கும் மேற்பட்ட சரக்கு வேன்களில் திருப்பூர் தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் 15 கிலோ கொண்ட 1 டிப்பர் தக்காளி ரூ.1,400 வரை விற்பனையானது. அதன் பின்னர் மெதுமெதுவாக விலை குறைந்து கடந்த வாரம் வரை 1 டிப்பர் ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனையானது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக விலை மேலும் சரிந்து 1 டிப்பர் தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரையே விற்பனையாகி வருகிறது.
விவசாயிகள் பாதிப்பு
இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:-
குறைந்த முதலீடு மற்றும் எளிதான பயிர் என்பதால் தக்காளியை விரும்பி பயிரிடுகிறோம். ஒரு டிப்பர் தக்காளி ரூ.140-க்கு குறையாமல் விற்பனையானால் மட்டுமே எங்களுக்கு டிப்பர் ஒன்றுக்கு ரூ.100 கிடைக்கும். ஆனால் தற்போது ரூ.50 முதல் ரூ.60 வரையே விற்பனையாகிறது.
 ஒரு டிப்பர் தக்காளியை மார்க்கெட்டில் விற்க வேன் வாடகை, கமிஷன், சுங்கம் என ரூ.40 வரை செலவாகிறது. இதனால் லாபம் என்பதே இல்லாத நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். அறுவடை செய்ய ஆட்களை வேலைக்கு அமர்த்தினால் தற்போதைய விலையில் நஷ்டம் ஏற்படும் என்பதால் பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிட்டோம். இதனால் தக்காளிகள் அழுகி வீணாகி வருகிறது.

மேலும் செய்திகள்