தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.;

Update: 2022-03-10 17:14 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ஜெகன் (வயது 20). இவரும் இவரது நண்பர் பூங்காவனம் மகன் ஹரி (24) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் கெடார் கிராமத்தில் இருந்து ஒதியத்தூர் நோக்கிச்சென்று கொண்டிருந்தனர்.
ஒதியத்தூர் தனியார் கல்லூரி அருகே சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜெகன், ஹரி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் அப்துல்லா, ஆம்புலன்சில் வந்த ராஜதுரை ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த ஹரி, ராஜதுரை, அப்துல்லா ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து பற்றி கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொருவர் சாவு

கச்சிராயப்பாளையம் அடுத்த அக்கராயப்பாளையம் சாலையில் கோமுகி ஆற்று பாலம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்