தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம்
தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான விழா கடந்த 1-ந்தேதி மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சாமி வீதி உலா நடந்தது.
தேரோட்டம்
நேற்று முன்தினம் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக பெரிய நாயகி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. உற்சவருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பெரியநாயகி அம்மன் சாந்த நிலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு கூடி நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது தேரில் பெரியநாயகி அம்மன் அசைந்தாடி வந்த காட்சியை பக்தர்கள் பயபக்தியுடன் கண்டு களித்தனர். தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
பாதுகாப்பு
முன்னதாக தியாகதுருகம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜா தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.