வேலூர் சைதாப்பேட்டையில் சாலை, கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
வேலூர் சைதாப்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
வேலூர் சைதாப்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கால்வாய் அமைக்கவில்லை
வேலூர் சைதாப்பேட்டை மெயின்பஜார் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கால்வாய் அமைக்கப்பட்ட பகுதியில் சிமெண்டு சாலையும் அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கோடையிடி குப்புசாமி மேல்நிலைப்பள்ளி அருகே கால்வாய் அமைக்க சுமார் 200 மீட்டர் தூரம் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பல நாட்கள் ஆகியும் அங்கு கால்வாயும் அமைக்கப்படவில்லை. அங்கு ஆக்கிரமிப்பு உள்ளதால் கால்வாய் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் அங்கு 200 மீட்டர் தூரத்தை தவிர்த்து சாலையின் மற்றொரு பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது. இடையே உள்ள பகுதியில் அதிகாரிகள் பணி செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆக்கிரமிப்பு
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சாலைப்பணி, கால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படவேண்டும் என்றனர்.
அப்போது போலீசார் மாநகராட்சி அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
அதில் பிரச்சினைக்குரிய இடம் அளவீடு செய்யப்பட்டு சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் பொதுமக்களிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.