டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்க்க ஏற்பாடு

டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்க்கும் வகையில் சாலையோரத்தில் உள்ள முட்புதர்களை வெட்டி அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-10 16:16 GMT
பொள்ளாச்சி
 
டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்க்கும் வகையில் சாலையோரத்தில் உள்ள முட்புதர்களை வெட்டி அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தீத்தடுப்பு கோடுகள்

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரக பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதைதவிர அரிய வகை தாவரங்கள் மற்றும் பறவை இனங்களும் உள்ளன. 

இதன் காரணமாக தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்த்து ரசிக்கும் வகையில் சேத்துமடையில் இருந்து டாப்சிலிப் வரை உள்ள சாலையோரத்தில் உள்ள முட்புதர்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றது.

 மேலும் தீத்தடுப்பு கோடுகளும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை வனச்சரகர் காசிலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

புதர்கள் வெட்டி அகற்றம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.23 லட்சம் செலவில் 170 கிலோ மீட்டர் தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகின்றது. உலாந்தி வனச்சரகத்தில் தண்ணீர் பள்ளம் பகுதியில் இருந்து டாப்சிலிப் வரை 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

சேத்துமடை வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து டாப்சிலிப் வரை சாலையோரத்தில் யானைகள், மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் எளிதில் பார்க்கும் வகையில் புதர்கள் வெட்டி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகள் எளிதாக வனவிலங்குகளை பார்க்கவும், காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்க சேத்துமடையில் இருந்து டாப்சிலிப் வழியாக கோழிகமுத்தி வரை சாலையின் இருபுறமும் 3 முதல் 6 மீட்டர் வரையில் புதர்கள் வெட்டி அகற்றப்படுகிறது. 

கோடை காலம் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்