ஆழியாற்றில் தண்ணீர் திருட பயன்படுத்திய மோட்டார் பம்புகள் குழாய் பறிமுதல்
ஆழியாற்றில் தண்ணீர் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் பம்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி
ஆழியாற்றில் தண்ணீர் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் பம்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆய்வு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. கேரளாவுக்கு ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் 7¼ டி.எம்.சி. தண்ணீர் ஆழியாற்றில் மூலமாக வழங்கப்படுகிறது.
இந்த தண்ணீர் மணக்கடவு என்கிற இடத்தில் கேரளாவுக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளது.
இதற்கிடையில் ஆழியாற்றில் குழாய் அமைத்து சட்டவிரோதமாக தண்ணீர் திருடுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன் உத்தரவின் பேரில் உதவி செயற்பொறியாளர் லீலாவதி தலைமையில் உதவி பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் சுழற்சி முறையில் ஆழியாற்று பகுதியில் ஆய்வு செய்து குழாய்கள், மோட்டார் பம்புகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
கோடை காலம் தொடங்கி உள்ளதால் ஆழியாற்றில் தண்ணீர் குறைவாக உள்ளது. இந்த நிலையில் கேரளாவுக்கு மணக்கடவு வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
கேரளாவிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் ஆழியாறு அணையில் இருந்து ஆற்றில் செல்லும் போது ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆனைமலை, கோட்டூர், ஆத்துப்பொள்ளாச்சி, அம்பராம்பாளையம், மார்ச்சநாயக்கன்பாளையம், காளியப்பகவுண்டன்புதூர் மற்றும் மணக்கடவு பகுதிகளில் சிலர் மோட்டார் மற்றும் டீசல் என்ஜின் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கின்றனர்.
இதனால் மணக்கடவு சிற்றணைக்கு செல்ல வேண்டிய தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு வழங்கப்படும் தண்ணீரை முறைகேடாக எடுப்பதை தடுக்க உதவி பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டீசல் என்ஜின், குழாய், மோட்டார் பம்புகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
எனவே சட்டவிரோதமாக ஆழியாற்றில் இருந்து தண்ணீரை எடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.