மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் விழா ஏற்பாடுகள் தீவிரம்

மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தெப்பத்தேர் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-10 16:16 GMT
பொள்ளாச்சி

மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தெப்பத்தேர் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ளித்தேர்

பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளித்தேர் திருவிழா கடந்த 15-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 22-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்பட்டது.

 இதை தொடர்ந்து பெண்கள் வீடுகளில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர். கடந்த 1-ந்தேதி கம்பத்தில் கோவில் பூவோடு வைக்கப்பட்டது. 5-ந்தேதி காலை 10 மணிக்கு கோவிலில் கொடியேற்று விழா நடந்தது.

9-ந்தேதி காலை 6 மணிக்கு கோவிலுக்கு பக்தர்கள் மா விளக்கு எடுத்து வந்தனர். அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு 8.50 மணிக்கு முதல் நாள் தேர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு வெங்கட்ரமணன் வீதியில் இமான்கான் வீதி சந்திப்பை அடைந்தது. இதற்கிடையில் 10-ந்தேதி பக்தர்கள் தேருக்கு உப்பு கொட்டி வழிப்பட்டனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தெப்பத்தேர் 

இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு 2-ம் நாள் தேர் புறப்பட்டு சத்திரம் வீதியை அடைந்தது. 11-ந்தேதி இரவு 7 மணிக்கு 3-ம் நாள் தேர் புறப்பட்டு, நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பாரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு தெப்பத்தேர் உற்சவம் நடந்தது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விழா நடைபெறவில்லை.

இந்த நிலையில் தெப்பத்தேர் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தெப்பத்தேர் தயார் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் மாலை உள்ளிட்ட பொருட்களை தெப்பக்குளத்தில் வீசி செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

12-ந்தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 14-ந்தேதி இரவு 8 மணிக்கு மகாஅபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

மேலும் செய்திகள்