திருக்கனூர் அருகே ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய கும்பல் கைது
திருக்கனூர் அருகே ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர், மார்ச்.10-
திருக்கனூர் அருகே உள்ள சோரப்பட்டு ஏரிக்கரையில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக திருக்கனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், அங்கு சூதாடிக் கொண்டிருந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. இதில் 3 பேர் போலீசிடம் மாட்டிக் கொண்டனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள், திருபுவனை பேங்க் வீதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 31), கலிதீர்த்தாள்குப்பம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த முருகன் (54), தமிழக பகுதியான விக்கிரவாண்டி மாத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பாஸ்கர் (47) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ.19 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.