தினத்தந்தி புகார்பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
தெருவிளக்கு வசதி தேவை
போடி அருகே உள்ள அம்மாபட்டி ஊராட்சி விசுவாசபுரத்தில் பள்ளிக்கு அருகே உள்ள தெருவில் விளக்கு வசதிகள் இல்லை. இரவில் தெரு முழுவதும் இருட்டாக இருப்பதால், மக்கள் நடமாடவே பயப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும். -கருப்புராஜ், விசுவாசபுரம்.
தெருநாய்கள் தொல்லை
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு, நாராயணபிள்ளைதோட்டம் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக உள்ளன. அதில் உடல் முழுவதும் புண்களுடன் சில நாய்கள் சுற்றுகின்றன. மேலும் இரவில் தனியாக செல்லும் நபர்களை துரத்தி, துரத்தி அவை கடிக்கின்றன. எனவே தெருநாய்களின் தொல்லையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அழகர், திண்டுக்கல்.
விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்கள்
திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தின் இருபக்கங்களிலும் செல்லும் இணைப்பு சாலைகளில் பெரிய பள்ளங்கள் உள்ளன. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்களை சரிசெய்ய வேண்டும். ராஜேஷ்கண்ணன், திண்டுக்கல்.
எரியாத தெருவிளக்குகள்
திண்டுக்கல் என்.ஜி.ஒ. காலனி உழவர்சந்தை அருகே உள்ள தெருக்களில் இரவில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இரவில் அந்த பகுதிகள் இருளில் மூழ்கிவிடுவதால், பெண்கள் வெளியே நடமாட அச்சமாக இருக்கிறது. எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். -செந்தில், திண்டுக்கல்.
அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்
திண்டுக்கல்லில் இருந்து ஏ.வெள்ளோடுக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த டவுன் பஸ் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே, புதிய பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருள், கல்லுப்பட்டி.
சேதம் அடைந்த பாலம்
சின்னமனூர் சாமிகுளத்தில் காளியம்மன் கோவில் அருகே உள்ள சிறு பாலம் சேதம் அடைந்து விட்டது. எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் முன்பு சேதம் அடைந்த பாலத்தை இடித்து விட்டு, புதிதாக பாலம் கட்ட வேண்டும். -அசாருதீன், சின்னமனூர்.