பொன்னேரி அருகே குளவி கொட்டியதால் 40 மாணவர்கள் பாதிப்பு
பொன்னேரி அருகே குளவி கொட்டியதால் 40 மாணவர்கள் பாதிப்படைந்தார்கள்.
பொன்னேரி அருகே ஞாயிறு கிராமம் உள்ளது. இங்கு அரசு மேல்நிலை பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றி அடர்ந்த மரங்கள், புதர்கள் உள்ள நிலையில் மின் வினியோகத்துக்கு இடையூறு ஏற்படுவதால் அதனை சுத்தப்படுத்தி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது புதர்களில் பல இடங்களில் குளவிகள் கூடு கட்டி இருந்தது. அந்த குளவிகள் கூட்டமாக பறந்து வந்து மைதானத்தில் விளையாடிகொண்டிருந்த பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேரை கொட்டியது. ஆசிரியர் ஒருவரையும், ஊர் பெரியவரையும் குளவி கொட்டியது.
தகவல் அறிந்த சோழவரம் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் குளவி கொட்டிய மாணவ-மாணவிகளை சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விவரங்களை அருகே உள்ள பூதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரிவித்தார். தரணி, சரண்யா ஆகிய 2 மருத்துவ அலுவலர்கள் ஞாயிறு மேல்நிலை பள்ளிக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.