கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகள் தர்ணா
பயிர்க்கடன் தொகையில் கலப்பு உரம் வழங்காததால் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி
பயிர்க்கடன் தொகையில் கலப்பு உரம் வழங்காததால் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலப்பு உரம்
நீலகிரி மாவட்டத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மலை காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
அதில் 25 சதவீத தொகையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் (என்.சி.எம்.எஸ்.) உரம் போன்ற இடுபொருள்கள் கட்டாயம் வாங்க வேண்டும். மீதமுள்ள தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதற்கிடையே விவசாயிகள் பயிர்க்கடன் தொகை வாங்கி 4 மாதங்களை கடந்தும் இதுவரை உரங்கள் வழங்கப்பட வில்லை.
தர்ணா போராட்டம்
இந்தநிலையில் சோலூர், தேனாடுகம்பை, கோடப்பமந்து, கோக்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று ஊட்டி சேரிங்கிராசில் உள்ள என்.சி.எம்.எஸ். அலுவலகத்துக்கு உரங்கள் வாங்க சென்றனர்.
அப்போது அவர்களுக்கு வினியோகிக்கப்படும் கலப்பு உரம் இருப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் என்.சி.எம்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் அவர்கள் அலுவலகம் முன்பு படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணி முதல் 11 மணி வரை 3 மணி நேரம் போராட்டம் நடத்தப்பட்டது.
கலப்பு உரம் வந்த பின்னர் உரம் வழங்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.