வேலூர் அருகே தனியார் நிறுவன தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வேலூர் அருகே தனியார் நிறுவன தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூரை அடுத்த பெருமுகையில் தனியார் ஷூ தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் பலமுறை தொழிலாளர்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொழிலாளர்கள் நேற்று காலை ஊதியம் உயர்த்தி வழங்குவது தொடர்பாக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்கோரி தொழிற்சாலை வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.