தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி. பொதுமக்கள் குறைகள் பகுதி

Update: 2022-03-10 15:07 GMT
(படம்) தகர ஷீட்டுகளால் தாழ்வாரம் அமைப்பார்களா?
ராணிப்பேட்டை வண்டிமேட்டுத் தெருவில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகள் மழை வெயிலில் அவதிப்படுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு, பக்க வாட்டில் நிழல் தரும் வகையில் தகர ஷீட்டுகளால் தாழ்வாரம் அமைத்துக் கொடுத்தால் நோயாளிகள் சிரமமின்றி சிகிச்சை பெற்று செல்வர். ஓய்வெடுக்கவும் வசதியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-த.நித்தியானந்தம், காரை.
(படம்) நாய்கள் தொல்லை
பேரணாம்பட்டு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலையில் செல்வோரை நாய்கள் அச்சுறுத்தி வருகின்றன. பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமிகள் அவசரத்துக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூட வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். வாகனங்கள் மீது நாய்கள் மோதி விடுவதால் விபத்துகள் நடக்கின்றன. இரவில் குரைப்பதால் தூக்கம் கெடுகிறது- பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.ஜுனைத்அஹ்மத், பேரணாம்பட்டு. 
(படம்) கோட்டை தடுப்புச்சுவரில் விரிசல்
வேலூர் கோட்டை மேற்பகுதி நடைபாதையைச் சுற்றி தடுப்புச் சுவர் உள்ளது. இந்த உட்புறமாக உள்ள தடுப்புச்சுவர் ஆங்காங்கே விரிசல் விட்டு இடியும் அபாய நிலையில் காணப்படுகிறது. பழமை வாய்ந்த கோட்டையை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்புச் சுவரின் விரிசல்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருமலைவாசன், வேலூர்.
சாலை வசதி செய்யப்படுமா?
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட தென்றல் நகர் 9-வது தெருவில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்தப் பகுதியில் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் கால்வாய் வசதிகள் சரிவர இல்லை. ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.
-ராஜ், திருவண்ணாமலை.


மேலும் செய்திகள்