கோத்தகிரி நேரு பூங்காவில் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி

கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க கோத்தகிரி நேரு பூங்காவில் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-03-10 15:05 GMT
கோத்தகிரி

கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க கோத்தகிரி நேரு பூங்காவில் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

நேரு பூங்கா

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா அமைத்து உள்ளது. இந்த பூங்காவில் ஆண்டுதோறும் கோடைவிழாவையொட்டி மே மாதத்தில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டாக கண்காட்சி நடத்தப்படவில்லை. 

ஆனால் இந்த ஆண்டில் கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் கண் காட்சி நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி இந்த பூங்காவில் முதற்கட்டமாக 20 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டு உள்ளன. 

தண்ணீர் பாய்ச்சும் பணி

மேலும் பூங்காவில் இருக்கும் புல் தரையில் வளர்ந்து வரும் புற்களை வெட்டி சமன்படுத்தும் பணியிலும் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் தற்போது சீதோஷ்ண நிலை மாறி வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. 

இதன் காரணமாக இந்த பூங்காவில் நடவு செய்யப்பட்டு உள்ள மலர் செடிகள் கருகுவதை தடுக்க அவற்றுக்கு ஊழியர்கள் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள். 

அதுபோன்று அழகு செடிகளை வெட்டிவிட்டு அதை அழகுபடுத்தும் பணியும் நடந்து வருகிறது. இது குறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, இந்த பூங்காவை மேம்படுத்த ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

இதையடுத்து பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைப்பது, கழிப்பிடங்களை புதுப்பிக்கும் பணி, செயற்கை நீரூற்று அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்