1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல்லுக்கு சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 1 டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்;
திண்டுக்கல்:
போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்
திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து தனிப்படை அமைத்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையில் ஈடுபடும்படி போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன்படி திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார், மேட்டுப்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
இந்த நிலையில் மேட்டுப்பட்டி பகுதியில் தனிப்படை போலீசார் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சரக்கு வாகனத்தில் வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் பெரியமல்லனம்பட்டியை சேர்ந்த காளிராஜா (வயது 29), கவாஸ்கர் (25), அரக்கோணத்தை சேர்ந்த புருஷோத்தமன் (34), பெங்களூருவை சேர்ந்த நாராயணன் (41) ஆகியோர் என்பதும், கர்நாடகாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
4 பேர் கைது
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 டன் புகையிலை பொருட்கள், சரக்கு வாகனம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் கர்நாடகாவில் யாரிடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்தார்கள்? திண்டுக்கல்லில் எந்தெந்த இடங்களில் அவற்றை விற்பனை செய்கின்றனர் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.