டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி
ஆற்காடு அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த டீ புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). டிராக்டர் டிரைவர். இவர் சம்பவத்தன்று டிராக்டரில் கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு திருவலம் அடுத்த அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த ரகோத்தமன் (62), கணியனூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (40) ஆகியோர் சென்று கரும்பு லோடு இறக்கிவிட்டு மீண்டும் ஊர் திரும்பினர்.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் வேப்பூர் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே வரும் போது பின்னால் வந்த லாரி, டிராக்டர் மீது மோதியுள்ளது. இதில் டிராக்டரில் அமர்ந்து வந்த ரகோத்தமன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். டிராக்டர் டிரைவர் மணிகண்டன் மற்றும் சண்முகம் ஆகியோர் காயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த இவர்களை மீட்டு வாலாஜாஅரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகோத்தமன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.