நடிகர் சூர்யா படம் வெளியான 9 தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு

நடிகர் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன’் படம் வேலூர் மாவட்டத்தில் 9 தியேட்டர்களில் வெளியானது. அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Update: 2022-03-10 13:14 GMT
வேலூர்

நடிகர் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன’் படம் வேலூர் மாவட்டத்தில் 9 தியேட்டர்களில் வெளியானது. அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜெய்பீம் பட விவகாரம்

நடிகர் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்' திரைப்படம் கடந்தாண்டு ஓ.டி.டி.யில் வெளியானது. இந்த திரைப்படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. அதேசமயம் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த கதாபாத்திரங்கள் மற்றும் சில குறியீடுகள் வன்னியர்களை தவறாக சித்தரிப்பது போன்று உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பா.ம.க. பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் ‘ஜெய்பீம்' படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் புகார் மனு அளித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்' படம் நேற்று தியேட்டர்களில் வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு கடலூர், கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடக்கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பினர்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் நேற்று வெளியானது. வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி பகுதியில் 6 தியேட்டர்கள், குடியாத்தத்தில் 3 தியேட்டர்கள் என்று மொத்தம் 9 தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது. இதையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர்களில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். படம் பார்க்க வந்த அனைவரும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் போலீசார் தியேட்டரின் உள் மற்றும் வெளிப்பகுதியை தீவிரமாக கண்காணித்தனர். தியேட்டரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்