தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் மகளிர் தின விழா
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சி.அமுதா தலைமை தாங்கினார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண் உறுப்பினர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பிரத்யேகமான மகளிர் உதவி மேஜை திறக்கப்பட்டது. சென்னை மற்றும் புதுச்சேரி தலைமை அலுவலக கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சந்திரமவுலி சக்கரவர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர், தகுதிவாய்ந்த பெண் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
இதையடுத்து கண்ணை கவரும் வகையிலான கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இந்த நிகழ்ச்சியில் சென்னை தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் பி.ஹங்சிங், சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் ஆன்ட்ரூ பிரபு உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.