நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் 2 நாள் உண்ணாவிரதம்

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தை இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் முன்னெடுக்கின்றனர்.

Update: 2022-03-10 10:38 GMT

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 2 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் முன்னெடுக்கின்றனர்.

இதில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற பிரதான கோரிக்கையோடு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், நீட் தேர்வு விலக்கு மசோதாவை கவர்னர் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் மாணவர்கள் வலியுறுத்தினர். நேற்று தொடங்கிய இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்ததோடு, நீட் தேர்வுக்கு எதிரான கண்டன குரலையும் பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்