செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

இரவில் நீண்டநேரம் செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் விரக்தி அடைந்த பிளஸ்-1 மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-03-10 05:56 IST
பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், சென்னை எழிலகத்தில் சர்வே துறையில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு 2 மகள்கள்.

மூத்த மகள், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். 2-வது மகள் தீபிகா(வயது 16). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

தீபிகா இரவில் நீண்டநேரம் செல்போன் பார்த்து வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த தீபிகா, நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து படிப்பதாக கூறிவிட்டு தனது அறைக்குள் சென்றார்.

ஆனால் மதியம் சாப்பிட வராததால் அவரது தாய் உஷா, கதவை தட்டி மகளை அழைத்தார். நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த உஷா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தனது மகள் தீபிகா, புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்