ரெயில் மோதி பயணி பலி; 2 பேர் படுகாயம்

கோலார் மாவட்டம் தேக்கல் ரெயில் நிலையத்தில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி பயணி ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2022-03-09 21:52 GMT
கோலார் தங்கவயல்:
கோலார் மாவட்டம் தேக்கல் ரெயில் நிலையத்தில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி பயணி ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் இருந்து பங்காருபேட்டை மார்க்கமாக பெங்களூருவுக்கு சுவர்ணா பயணிகள் ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. இதில், தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். தங்கவயல் மக்களின் வாழ்வாதாரமாக இந்த ரெயில் உள்ளது. இந்த நிலையில், நேற்று காலை மாரிக்குப்பத்தில் இருந்து வழக்கம் போல் சுவர்ணா ரெயில் இயக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த ரெயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்காருபேட்டையை அடுத்த தேக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் குப்பத்தில் இருந்து பெங்களூரு செல்லும் ரெயிலும் தேக்கல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. 

பயணி பலி

வேலைக்கு நேரமாகி கொண்டிருந்ததால், எந்த ரெயில் முதலில் புறப்படுகிறதோ அந்த ரெயிலில் செல்ல பயணிகள் கீழே இறங்கி காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக மைசூருவில் இருந்து சென்னை நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதனால், பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடி உள்ளனர். எனினும், அதிவேகமாக வந்த அந்த ரெயில் ஒரு பயணி மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
சதாப்தி ரெயில் வந்த தண்டவாளத்தின் இருபக்கங்களிலும் ரெயில்கள் நின்று கொண்டிருந்ததால் பயணிகள் அவற்றுக்கு  இடையில் சிக்கி கொண்டனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தேக்கல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

பின்னர் விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயநகரை சேர்ந்தவர்

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரெயில் மோதி பலியானவர் விஜயநகரை சேர்ந்த ஷஹபாஸ் அகமதுஷரீப்(வயது 23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்