மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 ஆண்டுகளில் 47 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 5 ஆண்டுகளில் 47 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக டீன் ரத்தினவேல் கூறினார்.
மதுரை,
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 5 ஆண்டுகளில் 47 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக டீன் ரத்தினவேல் கூறினார்.
உலக சிறுநீரக தினம்
மதுரை அரசு ஆஸ்பத்திரியின் சிறுநீரகவியல் துறை மற்றும் அவசர மருத்துவத்துறை சார்பில் உலக சிறுநீரக தினம் கொண்டாடப்பட்டது. சிறுநீரகவியல் துறை இணை பேராசிரியர் அருள் வரவேற்றார். அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
"மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 1984-ம் ஆண்டு சிறுநீரக துறை தொடங்கப்பட்டது. 1986-ம் ஆண்டு முதல் ஹீமோடயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு மற்றும் வயிறு வழியாக செய்து கொள்ளும் பெரிடோனியல் டயாலிசிஸ் சிகிச்சை தொடங்கப்பட்டது. உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து தானம் பெற்று செய்யப்படும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது, முதல்முறையாக 3.12.1986-ல் செய்யப்பட்டது. இதுபோல், இறந்தவர்களிடம் இருந்து தானம் பெற்று செய்யப்படும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 28.3.2017-ல் செய்யப்பட்டது.
47 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
கடந்த 5 ஆண்டுகளில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்டுக்கு சராசரியாக 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை ஹீமோ டயாலிசிஸ் செய்யப்படுகிறது. நிரந்தர பெரிடோனியல் டயாலிசிஸ் சிகிச்சை 51 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக மருத்துவத்துறை மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சைதுறை இணைந்து கடந்த 5 ஆண்டுகளில் 47 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை செய்துள்ளது. இதில் 21 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள், இறந்தவர்களிடம் இருந்து சிறுநீரகம் தானமாக பெற்று செய்யப்பட்டதாகும்.
கொரோனா காலத்தில் 1,922 ஹீமோ டயாலிசிஸ் வழங்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ 30 பேருக்கு நிரந்தர பெரிடோனியல் டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
சிறுநீரக ஆரோக்கியம்
இதனை தொடர்ந்து, மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் தர்மராஜ், பொது மருத்துவத்துறை பேராசிரியர் நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பேராசிரியர்கள் மணிமாறன், செல்வகுமார், பேராசிரியர் சரணவக்குமார் ஆகியோர், சிறுநீரக தானம் பற்றியும், சிறுநீரக ஆரோக்கியம் குறித்து பேராசிரியர் மனோராஜன், உடல் உறுப்பு தானம் குறித்து சிறுநீரக மாற்று ஒருங்கிணைப்பாளர் ஜெகபிரியா பேசினர்.
முன்னதாக உலக சிறுநீரக தினத்தையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவியம், நாடகம், கவிதை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.