வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு; 2,924 ஏக்கர் விவசாய நிலம் பயனடைகிறது
2 ஆயிரத்து 924 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அந்தியூர்
2 ஆயிரத்து 924 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 32.46 அடியாக உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக வரட்டுப்பள்ளம் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது அணையின் நீர்மட்டம் 32.38 அடியாக உள்ளது.
இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு கொப்பு வாய்க்கால் மூலம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்்.
தண்ணீர் திறப்பு
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 9-ந் தேதி தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.
அரசின் உத்தரவுப்படி நேற்று வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஏ.எஸ்.நாகராஜா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவி, உதவி செயற்பொறியாளர் தமிழ் பரத் மற்றும் பாசன சபை விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மதகை திருகி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டனர். அப்போது அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்தது. சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர் தூவி விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
2,924 ஏக்கர்
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘9-ந் தேதியில் இருந்து (அதாவது நேற்று) வருகிற ஜூன் மாதம் 17-ந் தேதி வரை 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு உள்பட்ட 2 ஆயிரத்து 924 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் மறைமுகமாக 1,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களும் பயன்பெறும்,’ என்றனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘குறுகிய கால பயிர்களான பருத்தி, எள், நிலக்கடலை, வெள்ளரிக்காய், கீரை போன்ற பயிர்களை சாகுபடி செய்ய உள்ளோம்,’ என்றனர்.