குடிநீருக்காக 55 அடி ஆழம் கிணறு தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை-வயதான தம்பதி வேதனை

சிக்கமகளூருவில் 55 அடி ஆழம் கிணறு தோண்டியும் தண்ணீர் கிடைக்காததால் வயதான தம்பதி மிகவும் மன வருத்தம் அடைந்துள்ளனர்

Update: 2022-03-09 21:32 GMT
சிக்கமகளூரு:
சிக்கமகளூருவில் 55 அடி ஆழம் கிணறு தோண்டியும் தண்ணீர் கிடைக்காததால் வயதான தம்பதி மிகவும் மன வருத்தம் அடைந்துள்ளனர்.

55 அடி ஆழ கிணறு 

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சின்னிகா கிராமத்தை அடுத்த அனஜூர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி சாரதா. கூலி தொழில் செய்து வருகின்றனர். இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் வேலை பார்த்தப்படி படித்து வருகின்றனர். தம்பதி கடந்த சில நாட்களாக குடிநீருக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இதனால் சொந்தமாக கிணறு தோண்ட முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டின் அருகே கிணறு தோண்ட முடிவு செய்தனர். சுமார் 55 அடி ஆழம் வரை தோண்டிவிட்டனர். ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளது.

பஞ்சாயத்து அதிகாரியிடம் புகார்
 
இந்த நிலையில் நேற்று தாலுகா பஞ்சாயத்து செயல் அதிகாரி பிரகாஷை சந்தித்த முதியவர் ராஜூ, கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், ‘‘20 ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசு சார்பில் நிலப்பட்டா வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஆஸ்ரையா திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை அவை கிடைக்கவில்லை. நாங்களே குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம். மின் இணைப்பு கிடையாது. மண்எண்ணெய் விளக்குதான் பயன்படுத்துகிறோம். தற்போது குடிநீர் வசதியும் இல்லை. 

சொந்த முயற்சியில் 55 அடி ஆழம் கிணறு தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் தாலுகா பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதை ஏற்ற பஞ்சாயத்து செயல் அதிகாரி பிரகாஷ், தாசில்தாரிடம் இதுபற்றி பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

மேலும் செய்திகள்