ஈரோட்டில் பரிதாப சம்பவம் ஓடும் காரில் திடீர் மாரடைப்பால் டிரைவர் சாவு; கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஸ்கூட்டரில் சென்றவரும் பலி
ஈரோட்டில் ஓடும் காரில் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்தார். கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் மோதி ஸ்கூட்டரில் சென்றவரும் பலியானார்.;
ஈரோடு
ஈரோட்டில் ஓடும் காரில் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்தார். கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் மோதி ஸ்கூட்டரில் சென்றவரும் பலியானார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திடீர் மாரடைப்பு
ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53). கார் டிரைவர். இவர் நேற்று மதியம் ஈரோடு கச்சேரி வீதியில் கார் ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அந்த கார் தாலுகா அலுவலகத்தை கடந்து சென்றபோது திடீரென ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் காரை இயக்கிய நிலையிலேயே ‘ஸ்டியரிங்கை’ பிடித்த நிலையில் மயங்கினார்.
இதனால், கார் கட்டுப்பாட்டினை இழந்து தாறுமாறாக ஓடி, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் சிக்னலில் நின்று கொண்டு இருந்த ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு அதற்கு முன்பு நின்றிருந்த பஸ் மீது மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், ஸ்கூட்டர் பஸ்சுக்கு அடிப்பகுதியில் புகுந்தது.
2 பேர் பலி
இந்த விபத்தில் ஸ்கூட்டரை ஓட்டி வந்த ஈரோடு கருங்கல்பாளையம் ஜானகி அம்மாள் லேஅவுட் பகுதியை சேர்ந்த திருமலைசாமி (55) மீது மோதியது. இதனால் அவரது முதுகு தண்டுவடமும், காலும் முறிந்தது. விபத்து ஏற்பட்டதும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த டவுன் போலீசார் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.
அவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த திருமலைசாமியையும், மாரடைப்பால் மயங்கி கிடந்த ராஜேந்திரனையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரனும், அவரை தொடர்ந்து படுகாயம் அடைந்த திருமலைசாமியும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் கார் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் நடந்த விபத்தில் அடுத்தடுத்து 2 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.