என்ஜினீயர் உள்பட 3 பேரிடம் ரூ.3½ லட்சம் மோசடி

என்ஜினீயர் உள்பட 3 பேரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-09 21:12 GMT
சேலம்:-
என்ஜினீயர் உள்பட 3 பேரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக்சிஜன் அளவீடு மீட்டர்
சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 30). அவருடைய செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் ஆக்சிஜன் அளவீடு மீட்டர் குறைந்த விலைக்கு தருவதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து 100 ஆக்சிஜன் மீட்டர் வாங்குவதற்காக ரூ.90 ஆயிரத்தை வாட்ஸ் அப் எண்ணில் குறிப்பிடப்பட்டு இருந்த வங்கி கணக்குக்கு அவர் செலுத்தினார்.
ஆனால் ஆக்சிஜன் அளவீடு மீட்டர் வரவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சம்பத்குமார் இதுகுறித்து சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
என்ஜினீயர்
சேலம் பெரமனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). இவர் தனியார் வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். அவருடைய வங்கி கணக்கில் இருந்து 2 தவணையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து சேலம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஜி (38). என்ஜினீயரான இவர் தனியார் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், கிரெடிட் கார்டு பிரிவின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறினார்.
விசாரணை
அப்போது கிரெடிட் கார்டின் விவரங்களை கேட்டறிந்த அந்த மர்ம நபர் ரகசிய எண்ணையும் விஜியிடம் இருந்து பெற்று கொண்டார். பின்னர் அவருடைய கிரெடிட் கார்டின் கணக்கில் இருந்து ரூ.87 ஆயிரத்து 593 அபேஸ் செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து விஜி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்