ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக சொல்ல வேண்டும்

ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பது பற்றி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக சொல்ல வேண்டும் என சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-09 21:12 GMT
சேலம்:-
ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பது பற்றி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக சொல்ல வேண்டும் என சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பேட்டி
சேலத்திற்கு நேற்று தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறந்த முதல்-அமைச்சர்
இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அது மட்டும் அல்லாமல் உலக அளவில் சிறந்த அரசியல்வாதியாகவும் உள்ளார். அவரை பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என நினைக்கிறேன். அதேபோல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்புகள் இனி குடும்ப தலைவிகளின் பெயரில் வழங்கப்படும் என்று மகளிர் தினவிழாவில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஜெயலலிதா மரணம்
மேகதாது அணை விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். தமிழக பட்ஜெட்டை பொறுத்தவரையில் மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நம்பலாம். ஜெயலலிதா மரணம் குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் உள்ளத்தில் எந்தவிதமான கள்ளம், கபடமும் இல்லை என்று சொன்னால், ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பதை அவர் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகம் சாமி ஆணையம் 9 முறை சம்மன் அனுப்பியும் இதுவரை அவர் வராதது ஏன் என்று தெரியவில்லை. அவருக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறதா? என்றும் தெரியவில்லை. உண்மையிலே என்ன நடந்தது? ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பதை முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படையாக ஆறுமுகசாமி ஆணையத்திடம் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

மேலும் செய்திகள்