நில மோசடியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கைது செய்ய வேண்டும்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மூதாட்டி புகார் மனு
நில மோசடியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மூதாட்டி புகார் மனு அளித்தாா்.
ஈரோடு
மொடக்குறிச்சி அருகே உள்ள 46 புதூர் நொச்சிநகரை சேர்ந்த மதியழகனின் மனைவி சுசீலா (வயது 62) ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-
அந்தியூர் அருகே பருவாச்சி கிராமத்தில் ஆசிரியர் காலனியில் உள்ள ஒரு வீட்டுமனையை ஈரோட்டை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான ராஜாங்கம் மூலமாக கடந்த 2013-ம் ஆண்டு வாங்கி இருந்தேன். சில மாதங்கள் கழித்து வீடு கட்டும் நோக்கத்தில் அந்த இடத்துக்கு சென்று பார்த்தேன். அங்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி விசாரித்தபோது ராஜாங்கம் என்பவர் 2014-ம் ஆண்டு எனது நிலத்தை மற்றொருவருக்கு கிரயம் செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தேன். அதன்பேரில் எங்களுக்கு நிலத்தை விற்ற ராஜாங்கம், பத்திரத்தை தயார் செய்த பத்திர எழுத்தர், துணை பதிவாளர் உள்ளிட்டோரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜாங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர். 3 மாதங்களாகியும் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ராஜாங்கத்தை கைது செய்து, எனது நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.