வீரப்பூரில் வேடபரி திருவிழா
வீரப்பூரில் வேடபரி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்;
மணப்பாறை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் உள்ள கன்னிமாரம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேடபரி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. கோவில் வழக்கப்படி முரசு கொட்டும் காளை முன்செல்ல, கோவில் பரம்பரை அறங்காவலர்களும், ஜமீன்தார்களுமான ஆர்.பொன்னழகேசன், சவுந்தரபாண்டியன், சுதாகர் என்ற சிவசுப்பிரமணிய ரெங்கராஜா ஆகியோரை மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் பெரியகாண்டியம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் பொன்னரும், யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மன் சிலையும் வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜமீன்தார்கள், பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து பொன்னர் சிலை அருகே குதிரை பூசாரி மாரியப்பன் சாமிக்கு குடைபிடித்து நிற்க, குதிரை வாகனத்தை கருமகவுண்டம்பட்டி, ஆனையூர், களத்துப்பட்டி, சுண்டக்காம்பட்டி, அமயபுரம் உள்ளிட்ட பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் ஊராளிக்கவுண்டர் சமூக இளைஞர்கள் உற்சாகமாக குதிரை வாகனத்தை சுமந்து வந்தனர்.
யானை வாகனம்
யானை வாகனத்தில் வைக்கப்பட்ட அம்மன் சிலை அருகே குடைபிடித்தபடி பெரியபூசாரி செல்வம் நிற்க, அந்த வாகனத்தை காட்டையம்பட்டி கொடிக்கால்காரர்கள் வகையறா ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் உற்சாகமாக சுமந்து வந்தனர். யானை வாகனத்தை தொடர்ந்து தங்காள் கரகம் சுமந்து வர சின்ன பூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் உடன் சென்றனர்.
ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் இருந்து வேடபரி வாகனங்கள் குதிரை கோவில் செல்லும் வழியில் இளைப்பாற்றி மண்டபம் என்ற இடத்தில் பெரியகாண்டியம்மன், தங்காள் நிற்க, குதிரை வாகனத்தில் பொன்னர் அணியாப்பூர் குதிரை கோவில் சென்று அங்கிருந்து கோட்டை மாரியம்மன் கோவிலை சுற்றி மீண்டும் இளைப்பாற்றி மண்டபம் வந்தடைந்ததும் வாகனங்களில் இருந்து சுவாமிகளை இறக்கி இளைப்பாற்றி மண்டபத்தில் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் நேற்று அதிகாலை 4 மணிக்கு இளைப்பாற்றி மண்டபத்தில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலை வந்தடைந்தது. வேடபரி சென்ற வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், குடிபாட்டுக்காரர்கள் திரண்டு வழிபட்டனர்.
்