லாரி-கார் டிரைவர்களுக்கு 2 ஆண்டு சிறை

பஸ்சுக்காக காத்திருந்த கணவன், மனைவி பலியான வழக்கில் லாரி டிரைவர்-கார் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2022-03-09 20:46 GMT
திருச்சி
திருச்சி அரியமங்கலம் மலையப்பநகர் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 45). இவரது மனைவி உமா மகேஸ்வரி (38). இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அதிகாலை கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்காக தங்களது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர். திருச்சி-தஞ்சை மெயின் ரோட்டில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி.கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செந்தில்குமாரும், உமா மகேஸ்வரியும் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
 அப்போது கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையை சேர்ந்த நாகராஜூ(38) ஓட்டிவந்த டிப்பர் லாரி எவ்வித சைகையும் காட்டாமல் ரோட்டின் வலதுபுறம் திரும்ப முயன்றது. அந்தவேளையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வடக்கு சன்னதி தெருவை சேர்ந்த புஷ்பராஜ் (43) ஓட்டிவந்த கார் மீது டிப்பர் லாரி மோதியது. லாரி மோதிய வேகத்தில் கார் இடதுபுறமாக சென்று அங்கு நின்று கொண்டிருந்த செந்தில்குமார், அவரது மனைவி உமாமகேஸ்வரி ஆகியோர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
2 ஆண்டு சிறை தண்டனை
இந்த விபத்து குறித்து பொன்மலை குற்றப்பிரிவு போலீசார், டிப்பர் லாரி டிரைவர் நாகராஜூ, கார் டிரைவர் புஷ்பராஜ் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி சாந்தி முன்பு நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், விபத்து ஏற்படுத்தி 2 உயிர்கள் பலியானதற்கு காரணமான நாகராஜூ, புஷ்பராஜ் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்