பச்சைக்காளி-பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி
தஞ்சையில் பச்சகாளி-பவளகாளி உறவாடுதல் நிகழ்ச்சி நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை வெண்ணாற்றங்கரையில் கோடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களுள் ஒன்றாகும். இந்த கோவிலில் பச்சைக்காளி, பவளக்காளி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பச்சைக்காளி, பவளக்காளி திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பச்சைக்காளி, பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி நேற்றுஇரவு தஞ்சை மேலவீதியில் நடைபெற்றது. இதையொட்டி நேற்றுமுன்தினம் அதிகாலை 2 மணிக்கு தஞ்சை மேலவீதியில் உள்ள சங்கரநாராயணர் கோவிலில் இருந்து பச்சைக்காளியும், கொங்கணேஸ்வரர் கோவிலில் இருந்து பவளக்காளியும் புறப்பட்டு நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நேற்றுஇரவு தஞ்சை மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்தில் இருந்து பச்சைக்காளியும், பவளக்காளியும் புறப்பட்டு, ஒவ்வொரு வீடாக சென்றனர். அங்கு பக்தர்கள் 2 காளிகளுக்கும் மாலை அணிவித்து பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் பச்சைக்காளி, பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானத்தினரும், மேலவீதி காளியாட்ட உற்சவ கமிட்டி தலைவர் பிரவு, செயலாளர் அருணாசலம், பொருளாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகளும் செய்து இருந்தனர். இன்று (வியாழக்கிழமை) விடையாற்றி விழா நடைபெறுகிறது.